- எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது.
- ஆலங்குடி மற்றும் திட்டை திருத்த லங்கள் குருபக வானுக்கு உரிய தலங்களாகும்.
குரு என்னும் வியாழ பகவானைத் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிக்கவராகையால் 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள்.
ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.
குரு நன்றாக அமைந்திருந்தால் நல்ல பிள்ளைகள், அவர்களால் முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தருவர்.
கம்பீரமான தோற்றம், சிறந்த குரல் வளம், புகழ், சன்மானம், நல்ல வீடு, வாகனம், நல்ல நண்பர்கள், சுற்றம், தெய்வ காரியங்களில் வெற்றி போன்ற பலன்களையும் குரு தர வல்லவர்.
குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும்.
கோச்சார ரீதியாக ஜென்ம ராசியில் இருந்து குரு 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களுக்கு வருகையில் நன்மை உண்டாகும்.
குருபகவானுக்கு அரசன், ஆசான், ஆண்டளப்பான், சிகண்டீ சன், சித்தன், சீவன், சுந்தரப்பொன், சுரகுரு, தேவமந்திரி, பிரகஸ்பதி, பீதகன், பொன், மந்திரி, மறையோன், வியாழன், வேதன், வேந்தன் என்று வேறு பெயர்களும் உண்டு.
தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதியான இவருக்கு உரிய அதிதேவதை பிரம்மன், நிறம் - மஞ்சள், வாகனம்-மீனம், தானியம் - கடலை, மலர்- வெண்முல்லை, ஆடை- மஞ்சள் நிற ஆடை, புஷ்பராகமணி, உணவு- கடலைப் பொடி அன்னம், ஆபரணம்- அரசன் சமித்து, தங்க உலோகம் ஆகியன ஆகும்.
இந்திரனின் அமைச்சராகவும் தேவர்களின் குருவாகவும் திகழும் வியாழன் பிரம்மதேவரின் புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும் வசுதா தேவிக்கும் பிறந்த குழந்தைகளுள் ஏழாவதாக பிறந்த சிறப்பினை உடையவராவார்.
இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர். பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.
குருவின் ஆட்சி வீடுகள் தனுசு, மீனம், மூலதிரிகோண ராசி தனுசு, உச்ச வீடு கடகம். நீச்ச வீடு மகரம் ஆகும். மேஷம் சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியன நட்பு வீடுகள்.
ரிஷபம், மிதுனம் துலாம் பகை வீடுகள்.
சூரியன், சந்திரன் நண்பர்கள். புதன் சுக்கிரன் பகைவர்கள். சனி, ராகு, கேது சம நிலையினர்.
ஒரு ஜாதகத்தில் குரு கெட்டுப் போயிருந்தால், அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுதல், பெரியோர் சொல் கேளாமை, தெய்வ நிந்தனை, உறவினருடன் பகை, பொய் கூறல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்.
தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும்.
வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு திசையில் வரைந்து, அதன் மேல் முல்லை மலர்கள் பரப்பிக் குரு யந்திரத்தை வைத்து அதற்கு முல்லை மலர் சூட்டி சந்தனப் பொட்டிட்டுப் பொன்னிறத்தட்டில் கடலை வைத்துத் தூப தீபம் காட்டி குரு காயத்ரியை 108 முறை மன ஒருமையுடன் கூறினால் குருவால் ஏற்பட்ட தீய பலன்கள் விலகும்.
நல்ல பலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்.
வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது.
வியாழனன்று குரு பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து புஷ்பராகம் வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி, அரச சமித்தினால் வேள்வி செய்து, கடலை பொடி அன்னத்தால் ஆகுதி செய்து, அஷ்டோத்திர அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியம் ஆகியவற்றைச் செய்து அடானா ராகத்தில் குருவுக்குரிய கீர்த்தனைகளைப் பாடி வணங்கக் குருக் கிரக தோஷம் நீங்கும்.
மஞ்சள் நிற ஆடையை உடுத்துவது புஷ்பராகமணியை அணிவது, மஞ்சள் நிற ஆடை, கடலை தானியம் ஆகியவற்றைத் தானம் செய்வது வியாழக்கிழமை களில் விரதங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் குரு தோஷப் பரிகாரங்களைச் செய்யலாம்.
எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது.
ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
இங்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.