ஆன்மிக களஞ்சியம்

பித்ரு தோஷ நிவர்த்தி தரும் பெருமாள் கோவில்

Published On 2024-10-23 10:13 GMT   |   Update On 2024-10-23 10:13 GMT
  • இந்த சன்னதியில் அபூர்வமான மகாலட்சுமி சாலக்கிராமம் உள்ளது.
  • இந்த சுவாமி எளிமையாக இதனை மட்டும் ஏற்று பித்ருக்களைத் திருப்தி செய்து வைப்பதாக ஐதீகம்.

வணங்க வேண்டிய தலம்:

நென்மேலி (நெம்மேலி)

இருப்பிடம்:

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் பேருந்து சாலையில் உள்ளது.

மூலவர்: ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள்

உற்சவர்: ஸ்ரார்த்த சம்ரக்ஷண நாராயணர்

தீர்த்தம்: அர்கிய புஷ்கரணி

சேஷத்ரம்: சம்ரக்ஷண சேஷத்ரம்

விருக்ஷம்: அக்ஷய வடம்

ஆராதனம்: வைகானச ஆகமம்.

தல வரலாறு:

இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த யாக்ஞ வல்கியரை குருவாகக் கொண்டு வாழ்ந்து வந்த யக்ஞ நாராயண சர்மா சரசவாணி என்ற தம்பதிகள் விஷ்ணுவின் மீது பெரும் பக்தி கொண்டு இருந்தனர்.

இவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தையும், தெய்வத் திருப்பணிகளுக்குச் செலவு செய்தனர்.

எனவே அரச தண்டனைக்கு ஆளானார்கள். அரச தண்டனையை ஏற்க மனமில்லாததால் திருவிடந்தை என்ற திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவர்கள் உயிர் துறப்பதற்கு முன்பாக தாங்கள் இறந்த பின்பு தங்களுக்கு ஈமக்கரியைகளைச் செய்ய வாரிசு இல்லையே என மனம் வருந்தினர்.

அவர்களுடைய கடைசி கால ஆசையை நிறைவேற்ற எம்பெருமானே முன்னின்று கிரியைகள் செய்து வைத்ததாக பெருமானே சாட்சியம் கூறினார்.

அதன் வழியே இன்றும் தன் சன்னதியில் அந்த வழி வந்தவர்களே தீர்த்தம், பிரசாதத்தை முதலில் ஸ்வீகரிக்கிறார்கள்.

மேலும் இந்த சன்னதியில் அந்த திவானின் வேண்டுகோளுக்கிணங்க வாரிசுகள் இல்லாதவர்களுக்கும், சிரார்த்தம் செய்ய இயலாதவர்களுக்கும், தானே முன்னின்று சிரார்த்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் (பகல் 12 மணி முதல் 1 மணி வரை) ஒரு காலம் ஆராதனம் மட்டும் ஏற்று விரதமிருக்கிறார்.

இந்த சன்னதியில் அபூர்வமான மகாலட்சுமி சாலக்கிராமம் உள்ளது.

தரிசிப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் தொழில் மேன்மையும், வியாபார அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும், குடும்ப அமைதியும் கிடைக்கும்.

இங்கு சிரார்த்தம் செய்ய விரும்புபவர்கள் அர்ச்சகரிடம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த பூஜை பகல் 12 மணிக்கு நடைபெறும். கலந்து கொள்பவர்கள் காலை 11.30 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும்.

இங்கு சிரார்த்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடைபெறும், பூஜையில் தங்கள் பித்ருக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரக்ஷணமாகும்.

இந்த சுவாமிக்கு நிவேதிக்கப்படும் வெண் பொங்கல் அல்லது தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் வைத்த துவையலும் சிரார்த்த தளிகையாகும்.

இந்த சுவாமி எளிமையாக இதனை மட்டும் ஏற்று பித்ருக்களைத் திருப்தி செய்து வைப்பதாக ஐதீகம்.

தினமும் நடைபெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியன்று கலந்து கொள்வதோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளில் செய்து வைப்பதோ 'கயா' சென்று சிரார்த்தம் செய்த பலனைக் கொடுக்கும்.

Similar News