ஆன்மிக களஞ்சியம்

கழுகுகள் வரலாறு-சம்பாதி, சடாயு

Published On 2024-08-21 11:51 GMT   |   Update On 2024-08-21 11:51 GMT
  • அவர்கள் தங்களுக்குள், பலத்தால் நான் பெரியவன் நான் பெரியவனென்று பகைத்தனர்.
  • விண்மீன்களும் கதிர் மண்டலத்துப் பச்சைக் குதிரைகளும் பறந்து செல்கின்றவர்களைக் கண்டு மனங்கலங்கிக் கண்களை மூடின.

திரேதாயுகத்தில் ஒளிபொருந்திய திங்களைப் போன்ற வெண்மை நிறம் உடைய கழுகுகளுக்கு இறைவர்களாகிய சம்பாதி, சடாயு என்னும் கழுகுகள் மிகுந்த பலத்துடன் விளங்கி இருந்தனர்.

அவர்கள் தங்களுக்குள், பலத்தால் நான் பெரியவன் நான் பெரியவனென்று பகைத்தனர்.

மூத்த சம்பாதியும் பலம் பொருந்திய சடாயு என்கிற தம்பியும் 'கதிரவனுக்கு மேல் போய் திரும்புவோம். திரும்பும்போது பார்க்கின்றவர்களுக்கு நம் உடல்பலம் தெரியும்' என்று சபதம் செய்து முனிவர் கூட்டத்தைச் சான்று வைத்து மேருகிரியினின்று எண்ணில் காலம் வானையொட்டிப் பறக்கலாயினர்.

அளவிலாக் காதங்கள் இவர்கள் பறத்தலைக்கண்டு தேவர்களும் முனிவர்களும் மயங்கி ஓடினார்கள்.

அவர்களுடைய சிறகுக் காற்றினால் வித்தியாதரர்கள் சித்தர்கள் கின்னரர்கள் என்னும் இவர்கள் செல்கின்ற அளவற்ற தேர்களும் விமானங்களும் வழி தப்பி ஓடின.

விண்மீன்களும் கதிர் மண்டலத்துப் பச்சைக் குதிரைகளும் பறந்து செல்கின்றவர்களைக் கண்டு மனங்கலங்கிக் கண்களை மூடின.

இவர்கள் இவ்வாறு கதிரவன் மண்டலம் நாடி வருவதைக் கண்ட கதிரவன் மண்டலத்திலிருக்கும் கணங்கள் பயந்து ஓடி கதிரவனிடம் கூறினர். இவ்வாறு இவர்கள் கதிரவன் மண்டலத்தில் புகுந்த அளவில் அங்கிருந்த வாய்மையில் சிறந்த அஞ்சனன் என்னும் முனிவன் அக்கழுகுகளை நோக்கி, ''நீங்கள் ஆயிரங் கதிர்களையுடைய கதிரவன் கோவிலை அணுகும்படி செல்கிறீர்கள்.

ஆதலால் நீங்கள் தீயை எடுத்து ஆடையில் அடக்கிக் கொள்ளவும் எண்ணங் கொள்வீர்கள். தம்மில் தகுதியுடையவர்களுடைய வெம்மையைக் கண்டஞ்சாதவர்கள் இப்பிறப்பில் மட்டும் அன்றி மறுப்பிறப்பிலும் துன்புறுவார்கள்.

நெறியில் செல்லுங் கதிரவனைத் தடுத்த தன்மையால், உங்கள் தருக்கை உங்கள் தீமையே அழித்துவிடும்.

கதிரவனுடைய நெருப்பினால் நீங்கள் இருவரும் மனம் வெந்து மேனி கரிந்து வெந்து ஒன்றாய் 'விழக்கடவீர்' என்று சாபம் மொழிந்தார்.

முன் சென்றவனாகிய சம்பாதி, சிறகு வெந்தனன், அது வெந்தபின் சிறகு எல்லாம் சிந்திப்போய்ப் பூமியில் விழுந்தான்.

பின்வந்த தம்பியாகிய சடாயு, ஒளிபொருந்திய சிறகு வேகாதவனாய்ப் பொலிவுள்ள உடல் பொரிந்து துன்பத்துடன் அழுதான்.

இவ்வாறு விழுந்த இருவரும் வருந்தி வானில் இருக்கும் அம்முனிவனை அழைத்து 'வெந்த இக்குறை நீங்கும் முறைமையை அய்யனே! சொல்லும்' என்று வேண்டினர்.

பெரிய வேதாசலத்தில் வீற்றிருக்கும் பரமசிவத்தைப் பூசித்தால் இந்தக் குறை அறிவில்லாதவர்களாகிய உங்களை விட்டோடும்' என்று அவர்களை அம்முனிவர் அனுப்பினார்.

அந்த முனிவர் கூறிய வண்ணம் சம்பாதி, சடாயுளாகிய இருவரும் திருக்கழுக்குன்றம் வந்து அங்கு இருக்கும் தடாக நீராலும் மலர்களாலும் இறைவனைப் பூசித்தனர்.

அந்தத் திரேதாயுகத்தில் அவ்விருவருக்கும் பரமசிவம் தரிசனம் கொடுத்தருளி அவர்கள் உடலில் பொருந்திய வெப்பத்தைத் தணித்தருளிப் பழைய பலம் உண்டாகக் கிருபை செய்து, அதன் பின்பு சம்பாதியை நோக்கி ''சீதையைத் தேட ராமன் விடுக்கும் தூதர்களால் உனக்குச் சிறையுண்டாகும்'' என்றருள் செய்தார்.

அத்திருவருளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சென்றார்கள்.

Tags:    

Similar News