- இத்தலம் வேதகிரி, வேதாசலம், கங்காசலம், கழுக்குன்றம் எனும் பெயர்களுடன் பட்சிதீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.
- இறைவன் மலையின் உச்சியில் கொழுந்து உருவில் இருப்பதால் இறைவனுக்கு மலைக்கொழுந்து என்றும் பெயருண்டு.
1. திருக்கழுக்குன்றத்தில் நான்கு வேதங்கள் மலையாகவும், அதன் உச்சியில் சிவபெருமான் சுடர் கொழுந்தாய் - சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். (சுயம்புமூர்த்தியின் மீது சிவலிங்கத் திருமேனியை பொருத்தியிருக்கிறார்கள் அபிஷேகம் முதலியன செய்ய).
2. இத்தலம் வேதகிரி, வேதாசலம், கங்காசலம், கழுக்குன்றம் எனும் பெயர்களுடன் பட்சிதீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.
3. இறைவன் மலையின் உச்சியில் கொழுந்து உருவில் இருப்பதால் இறைவனுக்கு மலைக்கொழுந்து என்றும் பெயருண்டு.
4. மாமல்லையை ஆண்ட சுரகுரு சக்கரவர்த்தியால் புதுப்பிக்கப்பெற்ற ஆலயம் தாழக்கோவில் என்று வழங்குகிறது. தாழ்வரைக் கோவில் என்பது தாழக்கோவில் என மருவிவந்த பெயராகும்.
5. ருத்திரகோடியர் பூஜித்த கோவில் மலையின் தென்கிழக்கு மூலையில் உருத்திரர் கோவில் எனும் பெயருடன் இருக்கிறது.
6. பலவகைப்பட்ட அசுரர்களை கொன்ற பாவம் நீங்க உருத்திரகோடியரும், பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவம் நீங்க நாராயணரும், சாவித்திரியினால் சபிக்கப்பட்ட பாவம் நீங்க பிரம்மதேவரும் இறைவன் சொல்லை மறுத்த பாவம் நீங்க நந்திதேவரும் மற்றும் எண் வசுக்களும் பிற தேவர்களும் முனிவர்களும் இத்தலத்தை வழிபட்டார்கள்.
7. திருஞானசம்பந்தர் மலையை வலம் வந்து தமிழ்மாலை பாடிய தலம். அவர் இறைவன் காதலித் துறையும் இடம் கழுக்குன்றே என்று சிறப்பிக்கின்றார்.
8. திருநாவுக்கரசர் "கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்" என்றும் 'கழுக்குன்றத் துச்சியாய் கடவுளே' என்றும் போற்றியுள்ளார்.
9. சுந்தரருக்குக் கண்ணொளியும், பொன்னும் அளித்த தலம்.
10. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தாம் வழிபட்ட இறைவனது திருவடிகளை, இங்கு வைத்துக் கோவில் கட்டி வழிபட்டார்.
11. இத்தலத்தில் முதல் யுகத்தில் சண்டன், பிரசண்டன் என்ற இரு கழுகுகளும், இரண்டாவது யுகத்தில் சம்பாதி, சடாயு எனும் இரு கழுகு அரசர்களும் மூன்றாவது யுகத்தில் சம்புகுந்தன், மாகுந்தன் எனும் இருவரும் சாபம் பெற்று கழுகுகளாய் பிறந்து முக்தி பெற்றனர்.
12. இக்கலியுகத்தில் பூஷா, விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூபப் பதவி வேண்டி தவம் செய்தனர். இறைவன் தோன்றி வரம் தரும்போது மறுத்து சாயுச்சியப் பதவி வேண்டினர். இறைவன் 'இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம்' என்றதையும் ஏற்காது மறுத்ததால் 'கழுகுருவம் அடைக' என்ற சாபம் பெற்று கழுகுகளாய் பிறந்து சம்பு, ஆதியெனும் பெயருடன் மலைக்கோவிலை வலம் வந்து தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
13. நந்திதேவர் கயிலையில் இருந்து எடுத்து வந்த சிகரத்தில் ஒன்றை இம்மலையில் வைத்ததால் இது தென்கயிலாயம் என்று புகழப்படுகிறது.
14. இத்தலத்திற்கு சிவபுரி என்றும் பெயர் உண்டு. இப்பெயர் ஆவணங்களில் இருக்கிறது.
15. இத்தலவிருட்சம், வாழை-கதலி எனவே இத்தலத்தை கதலிவனம் என்றும் அழைக்கிறார்கள்.
16. இந்திரன் வழிபட்டதற்கு அடையாளமாக இங்கு மலைமீது இடிவிழுந்து சிவலிங்கத் திருமேனியினைத் திருமஞ்சனம் செய்கிறது. இது குறித்து பல நூல்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்தது இத்தலம்.
17. மறைமலையடிகளார் எனும் சாமி வேதாசலம் அவர்களை, அவர்கள் தாய், தந்தையர் இப்பதியில் சங்குதீர்த்தத்தில் நீராடி மலைவலம் வந்து திரிபுரசுந்தரியையும், வேதகிரிப் பெருமானையும் வழிபட்டு பெற்றெடுத்தனர். மறைமலையடிகளாருக்கு இத்தலத்தின் மீது ஈடுபாடு அதிகம்.
18. தமிழ் தாத்தா ஸ்ரீஉ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் இங்குள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு வந்து தங்குவார்.அவர் 1942 முதலில் தம் வாழ்நாள் இறுதியுணர்ந்து, இங்கு வந்து தங்கி, 28-4-1942ல் திருவாவடுதுறை மடத்தில் உள்ள நடைத்திண்ணையில் பூதவுடல் நீத்து இறைவனடி சேர்ந்தார்.
19. ஸ்ரீவரகவி கன்னியப்ப முதலியார் திரிபுரசுந்தரி அம்மன் மீது இரட்டை மணிமாலை பாடி இருக்கிறார்.
20. இத்தலத்தில் மலைமீது தவமே உருவாய ஸ்ரீசுப்பய்ய சுவாமிகள் தவமியற்றி இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி மலை வலப்பாதையில் அழகுற இருக்கிறது.