ஆன்மிகம்
பாபநாச சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா நிகழ்ச்சியில் கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா தொடங்கியது

Published On 2017-04-06 06:48 GMT   |   Update On 2017-04-06 06:48 GMT
பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோன்று இந்த ஆண்டுக்கான சித்திரை விசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சார்பில் திருவிழா நடைபெறும்.

1-ந் திருநாளான நேற்று இரவில் சிறப்பு தீபாராதனை, விடாய் சாத்தி சப்பர ஊர்வலம் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) இரவில் கைலாச பர்வதம், அன்ன வாகனங்களில் வீதிஉலா, நாளை பூதம், சிம்ம வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதி உலா, 8-ந் தேதி (சனிக்கிழமை) ரிஷப வாகன காட்சி, 9-ந் தேதி ஏகசிம்மாசனத்தில் காட்சியளித்தலும் நடக்கிறது.

10-ந் தேதி ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளல், 11-ந் தேதி சோமாஸ்கந்தர் ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளல், 12-ந் தேதி சுவாமி-அம்பாள் வெட்டுங்குதிரை, காமதேனு வாகனங்களில் வீதிஉலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.



சிகர நிகழ்ச்சியாக 14-ந் தேதி சித்திரை விசு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு தந்த பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலா, மதியம் ஒரு மணிக்கு சித்திரை விசு, தீர்த்தவாரி கேடயத்தில் எழுந்தருளல், இரவு 8 மணிக்கு பாபநாசநாதர்- உலகாம்பிகை தெப்ப உற்சவம், நள்ளிரவு ஒரு மணிக்கு விடாய் சாத்தி, சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளி அகஸ்திய முனிவருக்கு காட்சி கொடுக்கும் வைபவமும் நடக்கிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் அழகப்பன், கிருஷ்ணகாந்தன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நெல்லை மாவட்ட துணை செயலாளர் செல்லத்துரை உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசுவரன், தக்கார் முருகானந்தம், ஆய்வாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News