ஆன்மிகம்
மயிலம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

மயிலம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2017-04-11 05:24 GMT   |   Update On 2017-04-11 05:24 GMT
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மயிலம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில்வடிவிலான மலையில் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. இரவில் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த 7-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், சிகர திருவிழாவான கடந்த 8-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது.

விழாவில் 10-வது நாளான நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மூலவருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை, முருகன் ஆகிய சுவாமிகள் பல்லக்கில் இருந்து அக்னி தீர்த்தகுளக்கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.



அங்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தெப்பத்தில் சாமிகள் எழுந்தருளினர். தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் 3 முறை அக்னி தீர்த்தக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது, பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை குளத்தில் போட்டும், கற்பூரம் ஏற்றியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் குமாரசிவ விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News