ஆன்மிகம்

சேலம் கோட்டை பெருமாள் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-06-01 07:39 GMT   |   Update On 2017-06-01 07:39 GMT
சேலம் கோட்டை பெருமாள் கோவில் பிரம் மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 8-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
சேலத்தில் பழமை வாய்ந்த கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவும், தேர்த்திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அழகிரிநாதருக்கும், தாயாருக்கும் பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதைத்தொடர்ந்து சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலின் உட்பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சாமி ஊர்வலமாக வந்து மீண்டும் சன்னதியை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை வெள்ளி பல்லக்கில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) சிம்ம வாகனத்திலும், நாளை மறுநாள் சேஷவாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி பிற்பகல் திருக்கல்யாண உற்சவம், மாலை வெள்ளி கருட வாகனத்திலும், 5-ந் தேதி யானை வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது.

6-ந் தேதி புஷ்பகவாகனத்தில்லும், 7-ந் தேதி குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா, 8-ந் தேதி பெருமாள் கோவிலில் இருந்து தேர் மண்டபத்திற்கு வருதலும், சாமி சப்பரத்தேரில் திருவீதி உலாவும் நடக்கிறது. அன்று மதியம் தேரோட்டம் நடக்கிறது. 10-ந் தேதி சத்தாபரண நிகழ்ச்சி, 11-ந் தேதி மாலை வசந்த உற்சவம் ஆகியவை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Similar News