ஆன்மிகம்

கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-06-01 07:45 GMT   |   Update On 2017-06-01 07:45 GMT
திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள திருக்கருக்காவூரில் கர்ப்பரட்சாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி கோவிலில் முல்லைவனநாதர், கர்ப்பரட்சாம்பிகை சன்னதிகளில் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பல்லக்கில் சாமி வீதி உலா நடந்தது.



விழாவையொட்டி சாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) சேஷ வாகனத்திலும், நாளை (வெள்ளிக்கிழமை) ஓலை சப்பரத்திலும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவமும், விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

வைகாசி விசாக திருவிழாவையொட்டி கோவிலில் கிராமிய இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள் நடைபெற்று வருகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் கோ.முரளிதரன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

Similar News