ஆன்மிகம்
பொற்கொடியம்மன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்பரதத்தில் எழுந்தருளியிருந்ததையும் படத்தில் காணலாம்.

பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா கோலாகலம்

Published On 2018-05-10 03:20 GMT   |   Update On 2018-05-10 03:20 GMT
வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அணைக்கட்டு அருகே உள்ள வேலங்காடு, வல்லண்டராமம், பொற்கொடியம்மன் கோவில் புஷ்பரத ஏரித் திருவிழா வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும். அனைத்து விவசாயிகளும் அவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளும் நோய் நொடியின்றி இருக்க பல நூறு ஆண்டுகளாக இந்த விழாவை வல்லண்டராமம், அன்னாச்சிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராம மக்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.

அதன்படி சித்திரை மாதம் கடைசி புதன்கிழமையான நேற்று திருவிழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மேற்கண்ட ஊர்களை பூர்வீகமாக கொண்டவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதலே அங்கு வர தொடங்கினர்.

ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம்படி மாட்டுவண்டியில் பசுந்தழைகளை கட்டி தென்னை ஓலைகளை கூடாரம்போல் அமைத்து, டிராக்டர், வேன், ஆட்டோக்களிலும் குடும்பத்துடனும், உறவினர்களையும் அழைத்துக் கொண்டு வந்தனர். இந்த விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனை புஷ்பரதத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. இதனையடுத்து வல்லண்டராமம், அன்னாச்சிபாளையம் ஆகிய கிராமங்களில் வாணவேடிக்கையுடன் புஷ்பரத உலா நடந்தது.

அந்த புஷ்பரதத்தை 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமந்தவாறு ஏரிக்கோவிலை மாலை 3 மணிக்கு வந்தடைந்தனர். வழக்கம்போல் 11 மணிக்கு வரவேண்டிய புஷ்பரதம் நேற்று 3 மணிக்கு ஏரிக்கோவில் அருகே பக்தர்கள் வெள்ளத்தில் நிலைநிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவைகளை பலியிட்டு வழிபட்டனர். ரதம் மீது பக்தர்கள் உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

திருவிழா நடைபெற்ற வேலங்காடு ஏரி ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும். இந்த நிலையில் பக்தர்கள் வெள்ளத்தால் நேற்று அந்த ஏரி நிரம்பியது. பெரும்பாலான பக்தர்கள் தங்கள் கால்நடைகளுடன் கோவிலை வலம் வந்து வழிபட்டனர்.

புஷ்பரதம் மாலை 5 மணிவரை ஒவ்வொரு ஆண்டும் நிலை நிறுத்தப்படும். ஆனால் நேற்று 3.45 மணிக்கே வேலங்காடு சென்றது. இதனால் மாலை நேரத்தில் வரும் பக்தர்கள் புஷ்ப ரதத்தை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News