ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் உள்தெப்பத்தில் தீர்த்தவாரி நடந்ததை படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரி - திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2018-06-29 05:12 GMT   |   Update On 2018-06-29 05:12 GMT
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழாவின் நிறைவாக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும்.

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்றனர். கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தினமும் இரவு பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.


நெல்லையப்பர் கோவிலில் சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுவாமி- அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களும் இழுத்து ஒரே நாளில் நிலைக்கு கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து நேற்று விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி நடந்தது.

அதாவது விழாவின் 10-வது நாளையொட்டி காலையில் சுவாமி, அம்பாள் சப்பர வீதிஉலா நடந்தது. மதியம் அம்பாள் சன்னதி அருகில் பொற்றாமரைக்குளம் கரையில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.

அங்கு சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. பின்னர் அஸ்திர தேவர், அஸ்திரதேவி ஆகிய சுவாமிகளுக்கு பொற்றாமரை குளத்துக்குள் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 
Tags:    

Similar News