ஆன்மிகம்

நவராத்திரி பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அங்குரார்ப்பணம்

Published On 2018-10-09 04:59 GMT   |   Update On 2018-10-09 04:59 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. புற்று மண் சேகரித்து, சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, 18-ந்தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

இன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சேனாதிபதியான விஸ்வசேனரை ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக மேற்கு மாடவீதியில் உள்ள வசந்த மண்டபத்துக்கு அர்ச்சகர்கள் கொண்டு வருகிறார்கள். அத்துடன் புற்று மண் சேகரித்து வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கு விஸ்வசேனருக்கும், புற்று மண்ணுக்கும் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.

பின்னர் விஸ்வசேனர், புற்று மண்ணை வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்து வந்து ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உள்ள யாக சாலையில் வைக்கிறார்கள். அந்தப் புற்று மண் நவராத்திரி பிரம்மோற்சவ விழா முடியும் வரை யாக சாலையிலேயே இருக்கும். அந்தப் புற்று மண்ணில் நவ தானியங்கள் தூவப்படுகின்றன.

அந்த நவ தானியங்கள் முளையிட்டு வளர்ந்ததும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் எடுத்துச் சென்று, திருமலையில் உள்ள புனித தீர்த்தத்தில் போடப்படுகிறது.

அங்குரார்ப்பணத்தையொட்டி இன்று வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை (புதன் கிழமை) காலை நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News