ஆன்மிகம்
உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம்

Published On 2018-11-26 07:45 GMT   |   Update On 2018-11-26 07:45 GMT
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 23-ந் தேதி மாலை நகரின் மையப்பகுதியில் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் பக்தர்களை போன்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிகழ்வு ஆண்டிற்கு 2 முறை மட்டுமே நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து 2-வது நாளும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடக்கும் திருவூடல் முடிந்ததும் பக்தர்களை போன்று அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருவார்.

அதன்படி, நேற்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தார். அருணாசலேஸ்வரருடன், பராசக்தி அம்மனும், துர்கை அம்மனும் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரர் கிரிவலத்தை யொட்டி கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தீபத்திருவிழாவை தொடர்ந்து அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. நேற்று இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடந்தது. தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (திங்கட்கிழமை) இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (செவ்வாய்கிழமை) சண்டிகேஸ்வரர் வீதி உலாவும் நடக்கிறது.
Tags:    

Similar News