ஆன்மிகம்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

Published On 2019-02-27 08:19 GMT   |   Update On 2019-02-27 08:19 GMT
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்கினர். மேலும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சில பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். மேலும் உடலில் சகதியை பூசி சேத்தாளி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து கோவிலை சுற்றி வலம் வந்த பக்தர்களையும் பார்க்க முடிந்தது.

இதனையடுத்து கோவில் முன்பு கழுமரம் ஊன்றப்பட்டது. அதன்பின்னர் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் கழுமரத்தில் ஏறினர். சிலர், கழுமரத்தின் உச்சியில் கட்டியிருந்த வேப்பிலையை தொட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர், பெரியவர், பெண்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இரவில் அம்மன் குளத்தில் கம்பம் விடப்பட்டது.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி அங்குள்ள பெரிய விநாயகர் திடலில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி அன்னதானம் நடந்தது. இதனை வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்குழுத்தலைவர் கண்ணுமுகமது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவருந்தினர்.

விழாவில் இளைஞர்கள் கழுமரம் ஏறுவதை படத்தில் காணலாம்.

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம், வர்த்தகர்கள் சங்கத்தை சேர்ந்த சேக்ஒலி, குத்புதீன், நம்பிராஜன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஆசைஅலங்காரம், அபுதாகீர், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்ராஜ் மீரான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அன்னதான கமிட்டி தலைவர் ஏர்வாடி முகமது இஸ்மாயில், துணைத்தலைவர் சிவாஜி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இந்த விழாவில் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தென் மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன்பிறகு இரவில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

நத்தம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Tags:    

Similar News