ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2019-03-23 03:13 GMT   |   Update On 2019-03-23 03:13 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் கோவில் கொடிமரத்தின் முன்புறம் அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

பின்னர் உற்சவரும், அம்மனும் திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். இரவு 11.30 மணி அளவில் கல்யாண மண்டபத்தில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு மேல் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டபகபடி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) இரவு திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் ஹோமமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

விழா நிறைவாக 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி அளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், குமரக்கோவிலில் மண்டகப்படியும் நடக்கிறது. மேலும் அன்றிரவு அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.
Tags:    

Similar News