ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2019-04-15 10:13 GMT   |   Update On 2019-04-15 10:13 GMT
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகிறது. தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் திருத்தேரில் எழுந்தருளியதும் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. முக்கிய வீதிகளில் தேர் வலம் வரும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இரவு 9 மணிக்கு மேல் அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி திருச்சியில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் குடமுருட்டி பாலம், ஜீயபுரம், பெட்டவாத்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக செல்லவேண்டும். சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சிக்கு வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களும் இதே வழியில் வரவேண்டும்.

* திண்டுக்கல் பகுதியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறையில் இருந்து ஆண்டவர் கோவில் சோதனைச்சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.

* மதுரை மார்க்கத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் லஞ்சமேடு கைகாட்டி, மணப்பாறை, ஆண்டவர் கோவில் சோதனை சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.

* திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கொள்ளிடம் ‘ஒய்’ ரோடு சந்திப்பு, கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை ஜங்ஷன், திருப்பட்டூர் கட் ரோடு, சிறுகனூர் ஜங்ஷன் வழியாக சென்னை சாலையை அடைய வேண்டும்.

* சென்னையில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர், அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சிக்கு வரவேண்டும். சென்னை சாலையில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் தச்சங்குறிச்சி, குமுளூர், பூவாளூர் ஜங்ஷன், லால்குடி ஜங்ஷன், கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சியை அடையவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News