ஆன்மிகம்

கள்ளழகர் எழுந்தருளுவதற்காக தங்க குதிரை, சேஷ, கருட வாகனங்கள் மதுரை வந்தன

Published On 2019-04-16 03:35 GMT   |   Update On 2019-04-16 03:35 GMT
சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளுவதற்காக அழகர்கோவிலில் இருந்து தங்க குதிரை, சேஷ மற்றும் கருட வாகனங்கள் மதுரைக்கு வந்தன.
மதுரையை அடுத்த அழகர்கோவில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந் திருவிழா நேற்று தொடங்கியது. அப்போது மேளதாளம் முழங்க சாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க் கிழமை) சாமி புறப்பாடு நடைபெறும். நாளை மாலை தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். 18-ந்தேதி மதுரை புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும்.

இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 20-ந்தேதி சேஷ வாகனத்தில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் காட்சி தருவார்.

பின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் பெருமாள், மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்குதல் நடைபெறும். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். 21-ந்தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும். மறுநாள் அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும். 23-ந்தேதி காலை கள்ளழகர் அழகர்கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேருவார். அதற்கு மறுநாள் திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவுபெறுகிறது.

இந்தநிலையில் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளுவதற்காக தங்க குதிரை, சேஷ மற்றும் கருடன் ஆகிய 3 வாகனங்களும் தனித்தனியே லாரிகள் மூலம் ஏற்றி நேற்று காலை அழகர்கோவில் இருந்து பாதுகாப்புடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தங்க குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் சேஷ வாகனமும், தேனூர் மண்டபத்தில் கருட வாகனமும் தனித்தனியே போலீஸ் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.மேலும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 27 உண்டியல் பெட்டிகளும் சாமியுடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படும். 445 மண்டகப் படிகளில் கள்ளழகர் காட்சிதருவார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News