ஆன்மிகம்
நடராஜர்

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோவில்களில் நடராஜருக்கு இன்று சிறப்பு அபிஷேகம்

Published On 2020-01-09 05:06 GMT   |   Update On 2020-01-09 05:06 GMT
ஆரூத்ரா தரிசனத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நடராஜருக்கு இன்று (வியாழக்கிழமை) சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் வருகிற நாளில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பாகும். ‘கர்மாவே பெரிது, கடவுள் இல்லை’ என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன், தனக்கு எதிராக ஏவப்பட்ட யாைனயை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாக கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள் தான் மார்கழி திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர், வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர் அழகு கோலத்தில் காட்சி அளிப்பதை தரிசித்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்க்களி தின்றால் அதன் பலன் அளவிடற்கரியது என ஆன்மிக தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாதிரை நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறது. இதையொட்டி சிவன் கோவில்களில் நாளை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நடராஜருக்கு இன்று (வியாழக்கிழமை) இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை அபிஷேகம் நடைபெறும். இதைதொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்படும். நாளை காலை 8 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி சிறப்பு அலங்காரத்தில் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அதன்பின் சாமி வீதி உலா உள் வீதி மற்றும் வெளி வீதிகளில் நடைபெற உள்ளது.

இதேபோல உறையூர் பஞ்சவர்ண சாமி கோவிலில் இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை காலை 8 மணிக்கு ருத்ரா யாகமும், காலை 9 மணிக்கு சாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. பகல் 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று இரவு 8.30 மணி முதல் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி புறப்பாடு நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு ஊடல் உற்சவம் நடைபெறும். இதேபோல உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாத சாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற உள்ளது.

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலிலும் இன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

Similar News