ஆன்மிகம்
கோவில் வளாகத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த காட்சி.

ஜெனகை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்தில் நடந்தது

Published On 2021-06-30 08:07 GMT   |   Update On 2021-06-30 08:07 GMT
பெண்கள் தங்களது நோய் குணம் அடைந்ததற்காக தாங்களாகவே மாவிளக்கு எடுத்து அம்மனை நினைத்து வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்தனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அரசு உத்தரவின்பேரில் பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகத்திலேயே நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் தேரில் பவனி வருவதுபோல் அலங்காரம் செய்து வைத்திருந்தனர். செயல் அலுவலர் இளமதி, சண்முகவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.

சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேப்பிலை மற்றும் தேங்காய் கையிலேந்தி பக்தி கோஷம் எழுப்பிக் கொண்டு 4 ரத வீதிகளில் வலம் வந்து கோவில் முன்பாக உள்ள கொடிக்கம்பத்தில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் வெளியே இருந்தபடியே முடி காணிக்கை செலுத்தினர்.

பெண்கள் தங்களது நோய் குணம் அடைந்ததற்காக தாங்களாகவே மாவிளக்கு எடுத்து அம்மனை நினைத்து வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்தனர். கோவில் முன்பாக இருந்தபடியே அம்மனை நினைத்து வணங்கினர். பக்தர்கள் அடுத்த ஆண்டாவது கொரோனா இல்லாத ஆண்டாக அமைய வேண்டும், கோவில்களில் முழுமையான திருவிழாக்கள் நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

வழக்கம் போல் ரத வீதியில் அன்னதானம் வழங்குதல், நீர் மோர், பானம் வழங்குதல் நடந்தது. சிலர் தேருக்கு முன்னால் சூறை போடுவது போன்று நினைத்து கோவில் முன்பாக நின்று மாம்பழம், வாழைப்பழம் சூறை இட்டனர். இந்நிகழ்ச்சி அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்தது.

Similar News