வழிபாடு
பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி

Published On 2022-04-12 03:19 GMT   |   Update On 2022-04-12 03:19 GMT
பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக திருப்பணி வேலைகள் நடந்து வந்ததாலும், கொரோனா தொற்று காரணமாகவும் திருவிழா நடைபெறவில்லை. திருப்பணி முடிந்து கடந்த 27.1.2022-ந் தேதி குடமுழுக்கு விழா நடந்தது.

இந்த ஆண்டு பங்குனி திருவிழா நடத்த முடிவு செய்து கடந்த மார்ச் 29-ந்தேதி நாடியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. கடந்த 5-ந் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மனுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடைபெறும். இதில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் விடிய, விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

நேற்றுமுன்தினம் இரவு மண்டபத்தில் இன்னிசை கச்சேரி நடந்தது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் மண்டபத்திலிருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் (பல்லக்கில்) செட்டியார் தெருவில் உள்ள மின் அலங்கார பந்தலுக்கு நாடியம்மன் வந்து வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பந்தலின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள்ளிருந்து 2 பதுமைகளும், தாமரைப்பூவில் இருந்து ஒரு பதுமையும் பல்லக்கிலிருந்த நாடியம்மனுக்கு போட்டிப் போட்டுக்கொண்டு வரகரிசி மாலை போட வந்தன.  15 நிமிடம் இந்த போட்டி நடைபெற்று முடிவில் 4.40 மணிக்கு பதுமைகள் வரகரிசி மாலை போட்டன. இந்த மாலை போடும் நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது.
Tags:    

Similar News