வழிபாடு

முனையடுவார் நாயனார் குருபூஜை இன்று

Published On 2024-03-20 03:00 GMT   |   Update On 2024-03-20 03:00 GMT
  • போர் வீரர்களுக்குத் தலைவராக இருந்து வந்தார்.
  • செல்வத்தை சிவனடியார்க்கு கொடுத்து மனம் நிறைபவர்.

முனையடுவார் நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். "அறை கொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்" என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

சிவபெருமான் திருவடியில் பேரன்புடையவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற செல்வத்தை சிவனடியார்க்கு கொடுத்து மனம் நிறைபவர். "போர் முனையிற் கொல்லும் தொழிலே புரினும் அடியர்க்கு அமுதளித்தல் பெரும் பேறாம்.'' என்ற சிந்தை உடையவர். வாய்மை உடையவர்.

சோழவள நாட்டில் உள்ள சிவத்தலங்களில் ஒன்றான திருநீடுர் பதியில் வீர வேளாளர் குடியிலே முனையடுவார் நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் போர் வீரர்களுக்குத் தலைவராக இருந்து வந்தார். இவர், தம்மோடு வீரமிக்க வேறு சில வீரர்களையும் சேர்த்துக்கொண்டு வீர அணி ஒன்றை அமைத்து வைத்துக்கொண்டு இருந்தார்.

தங்களை நாடி வரும் மன்னருக்கு உதவியாக களம் சென்று அம்மன்னர்க்கு வெற்றியைத் தேடித்தருவார். இது ஒரு பழங்கால வழக்கம். இவ்வழக்கத்தையே தமது தொழிலாலக்கொண்டு, வாழ்ந்து வந்த முனையடுவார் தமக்கு கிட்டிய ஊதியத்தைச் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்கள் திருத்தொண்டிற்கும் பயன்படுத்தினார்.

திருநீடுர்ப்பெருமான் பேரருளால் பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்தது. அத்தனையும் ஆண்டவனுக்கும் அடியவர்க்கும் செலவிட்டார். உலகில் பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார். முனையடுவார் நாயனார் குருபூஜை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரமான இன்று கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News