உடற்பயிற்சி

மூட்டுக்களை வலுவாக்கும் கருடாசனம்

Published On 2023-03-09 03:45 GMT   |   Update On 2023-03-09 03:45 GMT
  • ஆக்ஞை சக்கரம் சீராக இயங்கினால் உயர்ந்த எண்ணங்கள் வளர்கிறது.
  • மூட்டு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

வடமொழியில் 'கருட' என்றால் 'கருடன்' அல்லது 'கழுகு' என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது. கருடாசனம் என்ற ஆசனத்தின் பெயருக்குப் பின்னால் இருப்பது வெறும் கழுகு அல்ல; அதன் குணாம்சங்களே. கழுகு பயமில்லாதது; எதையும் எதிர் கொள்ளும் துணிவு கொண்டது.

கருடாசனம் ஆக்ஞை சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. Third Eye Chakra என்றும் Ajna Chakra என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆக்ஞை சக்கரம் மிகவும் வலிமை வாய்ந்ததாகும்.

ஆக்ஞை சக்கரம் சீராக இயங்கினால் உயர்ந்த எண்ணங்கள் வளர்கிறது. உள்ளுணரும் ஆற்றல் வளர்கிறது. இது ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதோடு, எதிர்மறை எண்ணங்களைப் போக்கவும் செய்கிறது.

பலன்கள் :

மூச்சுக் கோளாறுகளைப் போக்குகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. கால் தசைகளை உறுதியாக்குகிறது. மூட்டுக்களை வலுவாக்குகிறது. உடம்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. இடுப்பை பலப்படுத்துகிறது. அடி முதுகு வலியைப் போக்குகிறது. சையாடிக் வலியைப் போக்குகிறது.

செய்முறை :

விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். வலது கையை நெஞ்சுக்கு நேராக உயர்த்தி கை முட்டியை மடக்கவும். இடது கையை வலது கைக்கு அடியில் கொண்டு வந்து அதனை வளைத்து, இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும். இடது கால் முட்டியைச் சற்று வளைக்கவும்.

வலது காலை உயர்த்தி இடது காலின் மேல் வைக்கவும். அதாவது, வலது தொடை இடது தொடையின் மீது இருக்க வேண்டும். வலது பாதத்தை இடது காலைச் சுற்றி கொண்டு வரவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். கால் மற்றும் கை மாற்றி மீண்டும் செய்யவும்.

இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.

தீவிர முட்டி அல்லது மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

ஒற்றைக் காலில் நிற்பது கடினமாக இருந்தால் சுவரை ஒட்டி நின்று பயிலவும்.

Tags:    

Similar News