60 வயதில் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்? ஏன் தெரியுமா?
- 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடற்பயிற்சியின் அவசியம் மேலும் கூடுகிறது.
- நடைப்பயிற்சி தவிர சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்.
60 வயதில் உடற்பயிற்சி கூடாது என்று நினைப்பவர்கள், அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள். தசைகளை ஸ்ட்ரெட்ச் செய்யவும், எலும்புகளைப் பலப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் எல்லா வயதினருக்குமே உடற்பயிற்சி அவசியம். தொடர் உடற்பயிற்சி மனநலனுக்கும் கைகொடுத்து ஸ்ட்ரெஸ்ஸை விலகச் செய்யும். சொல்லப்போனால் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடற்பயிற்சியின் அவசியம் மேலும் கூடுகிறது. தண்டுவடப் பிரச்னைகள், இடுப்பு மூட்டுப் பிரச்னைகள் என, இந்த வயதுக்கு மேல் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, அவர்கள் தினமும் தசை மற்றும் எலும்புகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகளைச் செய்து வருவது நல்லது.
வயது முதிர்ந்தோருக்கு நடைப்பயிற்சி என்பது இதயத்துடிப்பைச் சீராக்கவும், தசைகளையும் எலும்புகளையும் வலுப்பெறச் செய்யவும் உதவும். வீட்டில் மேடு, பள்ளமற்ற சமதளப் பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்தப் பகுதி மிகவும் வழுவழுப்போ, அதிகம் சொரசொரப்போ இல்லாத வகையில் இருக்க வேண்டும். எந்த இடையூறும் இன்றி நடக்கக்கூடிய வகையில் பொருள்கள் எதுவும் குறுக்கே இல்லாத பரப்பாக இருக்கலாம்.
அந்த நீண்ட பரப்பில் நேராகவும், `8' எண் வடிவிலும் நடக்கலாம். வெறும் வயிற்றில் நடக்காமல் கொஞ்சம் தண்ணீர் அருந்திக்கொள்ளலாம். முதல் பத்து நிமிடங்களுக்கு மெதுவாக நடக்கத்தொடங்கி, அடுத்த 20 நிமிடங்களில் சற்று வேகத்தை அதிகரித்துக்கொள்ளலாம். நடக்கும்போது உடலில் வலி எதையாவது உணர்ந்தால் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு பின்னர் தொடரலாம். வலி தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காலையிலோ, மாலை 6 மணிக்குப் பின்னரோ நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
நடைப்பயிற்சியின்போது வெறுமனே நடக்காமல், கைகளையும் விரல்களையும் மடக்கி விரித்து அவற்றுக்கும் பயிற்சி தரலாம்.
நடைப்பயிற்சி தவிர சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்யலாம். ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, இரண்டு கைகளுக்கும் வெயிட் லிஃப்டிங் பயிற்சி கொடுக்கலாம். தோள்களுக்கும் கைகளுக்கும் இது நல்ல பயிற்சியாக அமையும்.
ஏரோபிக், யோகா பயிற்சிகள் செய்யலாம். பிடித்த பாடல்களை மென்மையாக ஒலிக்கவிட்டு அவற்றைக் கேட்டுக்கொண்டும் பயிற்சி செய்யலாம்.