பொது மருத்துவம்

தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகலாமா?

Published On 2023-04-28 07:55 GMT   |   Update On 2023-04-28 07:55 GMT
  • இரவில் நீரிழப்பு ஏற்பட்டால் உடல் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும்.
  • தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் பருகுவது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது.

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு செல்போன், டி.வி. உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தவிர்ப்பது, காபி பருகுவது தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு முன்பு திரவ உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. தூங்க செல்லும்போது தாகம் எடுத்தால் தண்ணீர் பருகலாமா? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கிறது. அப்படி தண்ணீர் பருகுவது நல்ல தூக்கத்திற்கு உதவுவதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரவில் தண்ணீர் பருகுவது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நிபுணர்களின் பரிந்துரை

தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இரவில் நீரிழப்பு ஏற்பட்டால் உடல் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது உடலை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க உதவும். உடலில் நீர்ச்சத்து போதிய அளவில் இருப்பதும் உறுதி செய்யப்படும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், மன நிலையை எதிர்மறையாக பாதிக்கும். தூக்க சுழற்சிக்கும் இடையூறு ஏற்படும்.

எனினும் தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் பருகுவது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு தூக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்தலாம். அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க நேரிடும். இரவில் அப்படி எழுந்திருப்பதை தவிர்க்க தூங்கச் செல்வதற்கு முன்பு திரவ வகைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவதன் மூலமாக சிறுநீர் பையில் அதிக அளவு சிறுநீரை தக்கவைத்துக்கொள்ள நேரிடும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

இரவில் ஏன் தண்ணீர் பருகக்கூடாது?

தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகினால் இரவில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல நேரிடும். இரவில் தண்ணீரை தவிர்ப்பதன் மூலம் சிறுநீர் உற்பத்தி குறையும். அதனால் இரவில் ஆறு முதல் எட்டு மணி நேரம் தடையின்றி தூங்கலாம். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவில் நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க பகலில் போதுமான தண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் இரவில் தண்ணீர் பருக வேண்டிய தேவை எழாது. உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்தால் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். அதுதான் சரியானது. சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ, வெண்மை நிறமாகவோ இருக்கக்கூடாது.

இரவில் எப்போது தண்ணீர் பருகலாம்?

இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு திரவ உணவுகளை உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும். தாகம் எடுப்பதாக உணர்ந்தால் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு தண்ணீர் பருகலாம்.

எந்த நீரை பருக வேண்டும்?

இரவில் குளிர்ந்த நீர் பருகலாமா? வெதுவெதுப்பான நீர் பருகலாமா? என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. குளிர்ந்த நீரை விட மிதமான சூடு கொண்ட வெதுவெதுப்பான நீரை பருகுவதுதான் சிறந்தது. அது இரவு முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் செயல்முறையை எளிதாக்கும். நச்சுத்தன்மையையும் போக்க உதவும். மேலும் இரவில் வெதுவெதுப்பான நீர் பருகுவது வியர்வை அதிகமாக சுரக்க வித்திடும். அது சரும செல்களை சுத்தப்படுத்தவும், உடலில் படிந்துள்ள அதிக உப்பு தன்மை மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். இருப்பினும் சிறுநீரக மற்றும் இதய நோயாளிகள் மருந்துவரின் பரிந்துரைப்படி தண்ணீர் பருக வேண்டும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News