பொது மருத்துவம்

உள்ளூர் பழங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

Published On 2022-10-05 07:34 GMT   |   Update On 2022-10-05 07:34 GMT
  • சில காய்கறிகள், பழங்கள் எப்போதும் சந்தையில் கிடைக்கும்.
  • உள்ளூர் பழங்களில் ஊட்டச்சத்தின் அளவும் அதிகம் இருக்கும்.

பருவகால உணவு என்பது அந்தந்த பகுதிகளில், அந்தந்த காலகட்டத்தில் விளையும் உணவு வகைகளாகும். அப்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சுவையானதாகவும், புத்துணர்ச்சியுடனும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அந்தந்த சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதாகவும் அவை இருக்கும். சில காய்கறிகள், பழங்கள் எப்போதும் சந்தையில் கிடைக்கும். ஆனால் அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவைகளாக இருக்கலாம்.

உள்ளூர் பழங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

அந்தந்த பருவ காலத்தில் உள்ளூரில் விளையும் பழங்கள் நன்கு பழுத்து, அதிக சுவை தரும். இயற்கையான சூழலில் சரியான விளைச்சலில் அறுவடை செய்யப்படுவதால் ஊட்டச்சத்தும் மிகுந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், ஆரஞ்சு பழத்தின் சுவை கோடையிலும், குளிர்காலத்திலும் மாறுபட்டு தெரியும். அதற்கு பருவகாலநிலைதான் காரணம்.

உள்ளூர் பழங்களில் ஊட்டச்சத்தின் அளவும் அதிகம் இருக்கும். அவைகளை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது சுவையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். அவற்றை அறுவடை செய்த உடனே உட்கொள்ளும்போது வைட்டமின் சி, போலேட், கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் நிரம்பி இருக்கும். அதிக நாட்கள் சேகரித்துவைத்து சாப்பிட்டால், ஊட்டச்சத்தின் அளவும், தரமும் குறைந்துபோய்விடும். மேலும் உள்ளூரில் உற்பத்தியாகும் பருவகால பழங்கள் பிரஷ்ஷாகவும், தரமானதாகவும் இருக்கும். வெளியூர்-வெளிநாடுகளில் இருந்து வரவைக்கப்படும் பழங்கள் தரம் மற்றும் சுவை குறைந்தே காணப்படும்.

உள்நாட்டு பருவகால பழங்கள், காய்கறிகள் அந்த சீதோஷ்ணநிலைக்கு ஈடுகொடுத்து நன்றாக வளரக்கூடியவை. அதனால் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டியதிருக்காது. பெரும்பாலான உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சை கொல்லி களின் தாக்கம் நிறையவே இருக்கிறது. அவற்றை அகற்றுவது கடினம். பருவகால உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் ரசாயனங்கள், அசுத்தமான பொருட்கள் சேருவதை கட்டுப்படுத்த முடியும்.

விவசாயிகள் பருவ காலத்தில் குறிப்பிட்ட பயிர்களை அதிகமாக விளைவிக்கும்போது விவசாயத்திற்கான செலவு குறைகிறது. அறுவடைக்கு பிறகு உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படும்போது போக்குவரத்து செலவு குறைகிறது. அதனால் விலைமலிவாக கிடைக்கும். உள்ளூரில் விளையும் உணவுப்பொருட்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் உடலுக்கு உகந்ததாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக அமையும். அனைத்து வயதினரும் சாப்பிடு வதற்கு உகந்ததாகவும் இருக்கும். சிட்ரஸ், வைட்டமின் சி அதிகம் கொண்ட உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை கோடை காலத்தில் போதுமான அளவு உட்கொண்டு ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டும்.

Tags:    

Similar News