வீட்டில் இருந்து வாக்களிக்க முதியவர்கள் ஆர்வம்- 103 வயது முதியவருக்கு தேர்தல் ஆணையர் போனில் பாராட்டு
- ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.
- வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாட்டிலேயே முதல் முறையாக 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதியில் இருந்து முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீடு தேடி வந்து வாக்கு சேகரிக்கும் தேர்தல் அதிகாரிகள் கொண்டு வரும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வாக்களித்து வருகிறார்கள்.
வருகிற 6-ந் தேதி வரை வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 99 ஆயிரத்து 529 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து வாக்குகளை பெறும் பணிக்காக 250 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெற்றனர். நேற்று ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் சிக்கோடியை சேர்ந்த 103 வயது முதியவரான மகாதேவ மகாலிங்க மாலி என்பவர் வீட்டில் இருந்து வாக்களித்திருந்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றி அந்த முதியவருக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது 103 வயதிலும் வீட்டில் இருந்து ஓட்டளித்த அவரை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அதுபோல் முதியவர் மகாதேவ மகாலிங்க மாலி, தன்னை போன்ற முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க அனுமதி வழங்கிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டையும், நன்றியையும் ராஜீவ்குமாரிடம் பகிர்ந்துகொண்டார். அத்துடன் இந்த நடைமுறை வருவதற்கு முன்பு தான் வீட்டில் இருந்து சிரமத்துடன் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தது பற்றியும், வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.