சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிப்பு- அதிர்ச்சி தகவல்
- கடந்த ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் 178 வழக்குகள் பதிவாகி இருந்தது.
- பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் சிறுமிகளை போன்று சிறுவர்களுக்கு எதிராகவும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கடந்த 2021-ம் ஆண்டு வெறும் 88 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் 102 வழக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு (2023) கர்நாடகம் முழுவதும் சிறுவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக 144 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது ஆண்டுக்கு, ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் 178 வழக்குகள் பதிவாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வழக்குகள் வெறும் 34 மட்டுமே குறைவாகும். குறிப்பாக மாநிலத்தில் பெங்களூரு, உடுப்பி, ஹாசன் மாவட்டங்களில் தான் அதிகளவு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன.
அதன்படி, பெங்களூருவில் 15 வழக்குகளும், ஹாசன் மாவட்டத்தில் 11 வழக்குகளும், உடுப்பியில் 10 வழக்குகளும் மங்களூரு டவுனில் 5 வழக்குகளும், துமகூருவில் 6 வழக்குகளும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 7 வழக்குகளும், சிவமொக்காவில் 8 வழக்குகளும், சிக்பள்ளாப்பூர், கேலார், விஜயாப்புரா, ராமநகர், விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 வழக்குகளும், மற்ற மாவட்டங்களில் ஒன்று, இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர்களுக்கு, அவர்கள் வேலை செய்யும் இடங்களில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும், பள்ளி ஆசிரியர்களும், வீட்டு வேலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு உரிமையாளர்களும், சில நேரங்களில் பக்கத்து வீட்டு பெண்களும், உறவினர்களும் தான் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இன்னும் பாதிக்கப்பட்ட நிறைய சிறுவர்கள் புகார் அளிக்காமல் சம்பவத்தை மூடி மறைத்து விடுவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், இது ஒரு தீவிரமான விஷயமாகும். பாலியல் தொல்லைக்கு உள்ளாகுபவர்கள் யாராக இருந்தாலும், அதனை தடுக்க வேண்டியது அவசியம்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து உடனடியாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் எனது துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.