கர்நாடக சட்டசபை தேர்தல்: சோனியாகாந்தி நாளை மறுநாள் பிரசாரம்
- ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.
- இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜனதாதளம்(எஸ்) சார்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அந்த கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி போன்றோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஹுப்பள்ளியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் . ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து சோனியாகாந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார். பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு 3.30 மணிக்குத் டெல்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சோனியாகாந்தி பிரசாரம் செய்யும் அதேநாளில் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி 36.6 கி.மீ. ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.