ஆட்சியை பிடிப்பது யார்? கர்நாடகாவில் நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க ஏற்பாடு
- வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் ஒதுக்கப்படும்.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 0.31 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(13-ந் தேதி) நடக்கிறது .
வாக்கு எண்ணிக்கை பணியில் ஊழியர்கள் 3 பிரிவாக ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர் இருப்பார். ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் ஒதுக்கப்படும்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கபப்பட்டு உள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன.
பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 4 மையங்களில் நடக்கிறது.
தேர்தல் முடிவுகளை ஆன்லைனில் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான eci.gov.in-ல் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த இணைய தளத்தில் ஏப்ரல் 2023 சட்டமன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல்' என்பதைக் கிளிக் செய்தால் முடிவுகள் தெரியும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1983-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல்முறையாக ஜனதா தளம் கடசி ஆட்சியை பிடித்தது. 1978 வரை நடந்த 6 சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்தது.
ஆனால் 1983-ல் வென்ற ஜனதாதளம்,1985-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியமைத்தது. அதன்பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.1994-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஜனதா தளம் வென்று ஆட்சியமைத்தது.
1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைத்தது. ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்த நிலையில், 2004-ம் ஆண்டு முதல் முறையாக ஜே.டி.எஸ்., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது.
2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வென்று கர்நாடகாவில் முழுமையாக ஆட்சி பொறுப்பேற்றது. 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைத்தது. 2018-ல் பா.ஜ.க., காங்கிரஸ், இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. 104 இடங்களில் வென்றும் ஆட்சியமைக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி தடலாடியாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு அளித்ததால் குமரசாமி முதல்வராக பதவியேற்றார். ஆனால் ஆட்சி ஒரு வருடம் கூட நீடிக்கவிலலை.
காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சியில் இருந்து சில அதிருபதி எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பா.ஜ.க.விற்கு மெஜாரிட்டி கிடைத்தது, அத்துடன் அங்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.க. வென்றதால் ஆட்சியை பா.ஜ.க. தக்கவைத்தது. முதலில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்றார். அதன்பிறகு பசவராஜ் பொம்மை அங்கு முதல்-மந்திரி ஆனார்.
இதுவரை 15 முறை நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பெரும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால் கடைசி 30 ஆண்டுகளில் இரு கட்சிகளும் மாறி மாறித்தான் ஆட்சி செய்து வருகின்றன. இந்தமுறை 16-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க.வும், எப்படியாவது வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கடும் போட்டியில் இருக்கிறன.
இவர்களில் யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் கட்சியாக குமாரசாமியின் ஜே.டி.எஸ் கட்சியும் இருக்கிறது. என்றாலும் கர்நாடகா மக்கள் யாரை ஆட்சியில் அமர வைக்க போகிறார்கள் என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.