செய்திகள் (Tamil News)
கட்சி நிர்வாகிகளுடன் சந்திரகுமார் ஆலோசனை நடத்தி பேசியபோது எடுத்தபடம்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க காணாமல் போய்விடும்: ஈரோட்டில் சந்திரகுமார் பேட்டி

Published On 2016-07-07 07:47 GMT   |   Update On 2016-07-07 07:47 GMT
ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. என்ற கட்சி காணாமல் போய்விடும் என்று மக்கள் தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார் பேசினார்.
ஈரோடு:

மக்கள் தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் தே.மு.தி.க அமைப்பு தி.மு.க.வுடன் இணையும் விழா வரும் 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதல்வர் ஆக்குவதுதான் எங்கள் குறிக்கோள். தி.மு.க.வுக்கு வலுசேர்க்க மக்கள் தே.மு.தி.க. தி.மு.கவுடன் சேர முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சென்று தே.மு.தி.க அதிருப்தி நிர்வாகிகளையும்- தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகிறோம். தே.மு.தி.க.வின் ஆணி வேராக உள்ள கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பல்வேறு தொண்டர்களை தி.மு.க.வில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தால் கட்சி கலைக்கப்பட்டு பா.ஜனதாவுடன் சேர வாய்ப்பு உள்ளதாக பேசி உள்ளார்.

ஆகவே உள்ளாட்சி தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. என்ற கட்சி காணாமல் போய்விடும் தே.மு.தி.க இப்போது செயல்படாத கட்சியாக உள்ளது. கட்சி பொறுப்பு மற்றும் பணியிலிருந்து பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் விலகி உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. அது ஒரு நாடகம்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள் ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

போட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்திபன் சேகர் மற்றும் இமயம் சிவகுமார், முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சந்திரகுமார் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News