செய்திகள் (Tamil News)

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நாளை பா.ம.க. ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-17 05:04 GMT   |   Update On 2017-03-17 05:04 GMT
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நாளை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நீதி வேண்டும். அவரை சுட்டுக் கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்து இந்திய சிறையில் அடைக்க வேண்டும். இலங்கை அரசிடம் இருந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்று மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 128 படகுகளை மீட்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதே போல ஈரான் நாட்டு சிறையில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி மீனவர்களையும் மீட்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வடமாநில மீனவர்கள் மீது அக்கறை செலுத்தும் மத்திய அரசு தமிழக மீனவர்களை புறக்கணித்து வருகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

சி.பி.எஸ்.இ. தரத்திற்கேற்ப தமிழகத்தில் கல்வித்தரம் இல்லை. எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News