செய்திகள் (Tamil News)

புதுக்கட்சி தொடங்கி தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சியை பிடிப்பார்: அர்ஜுன் சம்பத்

Published On 2017-09-28 05:06 GMT   |   Update On 2017-09-28 05:06 GMT
தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பார். அவருக்கு இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த ஆர்.கொல்லப்பல்லி கிராமத்தில் உள்ள ஞானதிருவளாக குமாரமடத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மடத்தின் பீடாதிபதி குருமகராஜ் சிவானந்தவாரியார் திருமடம் அமைத்து ஆன்மிக பணிகளை செய்து வருகிறார். இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். இங்கே வைத்துள்ள பேனர்கள் மற்றும் பொருட்களை அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.


மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பிரசாரம் செய்து வருகின்றனர். தேசவிரோத பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன்காந்தி, டைசன் போன்றோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து இந்திய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், தமிழகம் தனிநாடு எனவும் இனவெறி கொள்கை பேசியும், பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியும் வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் உள்நோக்கத்துடன் பேசியும், மாணவர்களை தூண்டியும் வருகின்றனர். இவர்களின் ஜாமீனை ரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், நளினிக்கு பரோல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பார். அவருக்கு இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளையும், கம்யூனிஸ்டுகளையும் ஒதுக்க வேண்டும்.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி போல் தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் கவர்னர்களை நியமிக்க வேண்டும். இன்று (நேற்று) பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் மணி விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். இந்த அரசியல் நாகரீகம் தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இந்து மக்கள் கட்சியின் வேலூர் மண்டல தலைவர் வேல்முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Similar News