செய்திகள்

67 ஆயுள் கைதிகள் விடுதலையை சட்டசபையில் அறிவிக்காதது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி

Published On 2018-06-04 07:39 GMT   |   Update On 2018-06-04 07:39 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் கைதிகள் விடுதலையை சட்டசபையில் அறிவிக்காதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். #TNAssembly #DMK #MKStalin
சென்னை:

தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் அனுபவித்தவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல் கட்டமாக 27.5.2018 அன்று 10 வருடங்கள் நிறைவு பெற்ற 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சனை இன்று சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சட்டசபை நடைபெறும் போது இந்த சபையில் அதை தெரிவிக்காமல் வெளியே செய்தியாக வெளியிடுவது மரபுதானா என்பதை அறிய விரும்புகிறேன். 67 பேர் விடுதலை செய்யப்படுவதை நான் வரவேற்கிறேன். என்றாலும் மரபுபடி அதை சட்டமன்றத்தில் அறிவித்து இருக்க வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்கனவே முதல்-அமைச்சர் பரிந்துரைத்தபடி நீண்டநாள் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.


என்றாலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு சிறையிலும் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் விசாரணை நடத்தி அவர்களின் உடல்நிலை, தண்டனை அனுபவித்த காலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

அரசியல் சட்டப்படி கவர்னர் பரிந்துரையின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இது தொடர் நடவடிக்கை. எனவே இந்த விடுதலை பற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மு.க.ஸ்டாலின்:- இவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்வதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. தொடர் நடவடிக்கை என்றாலும் அவர்கள் விடுதலை செய்யப்படுவது இதுதான் முதல்முறை. எனவே சட்டமன்றத்தில் இதை அறிவிக்காதது மரபு அல்ல.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- கடந்த காலங்களில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மொத்தமாக அறிவிக்கப்படும்.

தற்போது ஒவ்வொரு கைதியாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவதால் மொத்தமாக யாரையும் விடுவிக்க முடியாது. அது முதல் கட்டம். தொடர்ந்து இன்னும் பலர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நடவடிக்கை தொடங்கி விட்டதால் சபையில் அறிவிக்கவில்லை.

சபாநாயகர் தனபால்:- கைதிகள் விடுதலையை தொடர் நடவடிக்கை என அமைச்சர் கூறிவிட்டார். எனவே இதுகுறித்து மேலும் விவாதிக்க வேண்டாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #DMK #MKStalin
Tags:    

Similar News