செய்திகள்

துன்பம் செய்யும் அரசை மக்கள் தட்டிக்கேட்க வேண்டும்: ப.சிதம்பரம் பேச்சு

Published On 2018-06-17 10:28 GMT   |   Update On 2018-06-17 10:28 GMT
துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்கும் மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும் என்று நூல் வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரம் பேசினார். #pchidambaram #tngovernment #congress

சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எழுதிய ‘ஸ்பீக்கிங் டுரூத் டூ பவர்’ என்ற ஆங்கில புத்தகம் மற்றும் அதன் தமிழாக்கம் ஆன ‘வாய்மையே வெல்லும்‘ புத்தகம்வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நேற்று மாலை நடைபெற்றது.

சேது சொக்கலிங்கம் வரவேற்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேசினார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஏற்புரையாற்றி பேசியதாவது:-

நான் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுகிறேன். ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு செய்யாமல் தமிழிலேயே எழுதிட முடியுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. என்றாவது ஒருநாள் தமிழில் கட்டுரை எழுத முயற்சிக்கிறேன்.

அரசு துன்பம் செய்யக்கூடாது. அப்படி துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்கும் மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும்.

இந்தியாவில் 2-ல் ஒரு குழந்தை ரத்தசோகையுடனும், 3-ல் ஒரு குழந்தை எடை குறைவுடனும், 5-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடனும் பிறக்கிறது. ஒரு குழந்தை இந்தியாவில் முழு மனிதனாக வரவே முடியாது.

சாதி, மதம் ஒழியவேண்டும் என்றால் அனைவரும் எழுதவேண்டும், அனைவரும் பேசவேண்டும். எழுதாத, பேசாத ஒரு சமுதாயம், ஊமைத் துறையாக அடங்கி இருக்கும்.

சமுதாயத்தில் எழுத்தும், பேச்சும் ஊன்றுகோலாக வேண்டும். அப்போது தான் சமுதாய சீரழிவுகள், அரசியல் ஒழுங்கீனங்கள், பொருளாதார தவறுகள் களையப்படும் என்று நம்புகிறேன். அதற்காகத்தான் நான் எழுதுகிறேன். அதற்காகவே பேசுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இறுதியாக கவிஞர் இலக்கியா நடராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் செய்து இருந்தார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ், துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pchidambaram #tngovernment  #congress

Tags:    

Similar News