செய்திகள்

2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவித்த தினகரன்

Published On 2018-07-15 06:16 GMT   |   Update On 2018-07-15 06:16 GMT
தேர்தலுக்கு 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Dhinakaran #Assemblyelection

திருச்சி:

திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறிய தாவது:-

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் விரோத, ஊழல் ஆட்சி நடை பெற்று வருகிறது. இதை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா கூறினால் ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தியாவிலேயே ஊழலில் முதலிடம் பெற்ற மாநிலமாகத்தான் தமிழகம் திகழ்கிறது. சாதாரண மக்களை கேட்டால் கூட இதனைத் தான் கூறுவார்கள்.

தமிழகத்தில் லோக்பால் கொண்டு வருவது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகும். பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேர வைக்கும் தேர்தல் வரும். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் மலரும். அப்போது உண்மையான லோக்பால் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்படும். யாரால் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். கைகோர்த்தார்களோ? அவர்களாலேயே அது பிரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது டி.டி.வி.தினகரன் பேசும் போது, துரோகத்தை கருவறுக்க வேண்டும் என்பார்கள். அது போலத்தான் இப்போது தமிழகத்தில் நடக்கும் துரோக ஆட்சிக்கு கரு உள்ள முட்டையின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மனோகரன் போட்டியிடுவார். அரசு தலைமை கொறடாவாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணியாற்றிய அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து அவர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் ஆட்சி முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Dhinakaran #Assemblyelection

Tags:    

Similar News