செய்திகள்

சென்னை ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் ஹூன்டாய்

Published On 2018-07-29 11:00 GMT   |   Update On 2018-07-29 11:00 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Hyundai


ஹூன்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தயாரிப்பு ஆலையில் ஆட்டோமொபைல் சந்தையில் வரும் 20 ஆண்டுகளுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை எதிர்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது. 

மேலும் எதிர்கால தொழில்நுட்பங்களான BS VI எமிஷன், கார் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், அனைத்து மாடல்களிலும் ஏ.பி.எஸ். மற்றும் ஏர்பேக் உள்ளிட்டவற்றை வழங்க முடியும் என ஹூன்டாய் மோட்டா இந்தியா லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வை.கே. கூ தெரிவித்தார்.

இதுதவிர இதே தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களையும் உற்பத்தி செய்ய முடியும். 2020-ம் ஆண்டிற்குள் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவெடுக்கும் நோக்கில் அனைத்து ஏற்பாடுகளையும் ஹூன்டாய் மோட்டார் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

2018-2020 ஆண்டுகளில் மட்டும் எட்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூன்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் அடங்கும், இந்த கார் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



இதுவரை எலெக்ட்ரிக் கார் சார்ந்து எவ்வித தகவலும் அந்நிறுவனம் வழங்கவில்லை என்பதால், புதிய கார் ஹூன்டாய் கோனா எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹூன்டாய் கார்களில் வழங்குவதற்கான பேட்டரிகளை பெற தென்கொரிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டிற்குள் அனைத்து மாடல்களையும் முழுமையாக மாற்ற ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது. இத்துடன் ஹூன்டாய் AH2 குறியீட்டு பெயரில் சோதனை செய்யப்படும் கார் சான்ட்ரோ என பெயரிடப்படாது என கூ தெரிவித்துள்ளார். இந்த கார் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்படுகிறது.

மேலும் அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய AH2 காரின் பெயரை வழங்கலாம். இந்த போட்டி ஆகஸ்டு 16 இல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது. #Hyundai
Tags:    

Similar News