தூத்துக்குடியில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை- பணம் கொள்ளை
- நேற்று மாலை மணவாளன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- திருட்டு சம்பவம் தொடர்பாக மணவாளன் நேற்றிரவு சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் காலனியை சேர்ந்தவர் மணவாளன் (வயது 45). இவர் தூத்துக்குடி மின்வா ரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பொன் செல்வி, தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவர்கள் வேலைக்கு சென்ற பின் இவர்களின் 2 மகன்களும் பள்ளிக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை மணவாளன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் பணம், மற்றும் ஒரு செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
திருட்டு சம்பவம் தொடர்பாக மணவாளன் நேற்றிரவு சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு திட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.