உள்ளூர் செய்திகள்

10 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

Published On 2023-05-07 09:53 GMT   |   Update On 2023-05-07 09:53 GMT
  • 2 ஆயிரம் ஏக்கர் கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • பருத்தி சாகுபடியை பொறுத்தவரை வேர் பகுதிகளில் தண்ணீர் இருக்கக்கூடாது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், மன்னார்குடி, வலங்கைமான், கோட்டூர், குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்தி பஞ்சு அதிகமான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால் இந்த ஆண்டும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டினார். அதனால் கடந்த ஆண்டைவிட 2000 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த பருத்தி செடிகள் பூ பூத்தும், காய்கள் விட்டும் நன்கு வளர்ந்துள்ளது. இந்த நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பரவலாக பெய்து வரும் கோடை மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பருத்தி சாகுபடி பொறுத்தவரை வேர் பகுதிகளில் தண்ணீர் இருக்கக் கூடாது. அதனால் தான் காவிரி டெல்டா பகுதிகளில் கோடையில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போதைய மழையால் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க சிரமமான சூழல் நிலவுகிறது.

வடிகால் வசதிகள் முறையாக தூர்வாரப்படாததால் பருத்தி வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பருத்தி சாகுபடிக்கு ரூ 25 ஆயிரம் வரையசெலவு செய்வதுண்டு. இதுவரை ரூபாய் 15 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 20 ஆயிரம் வரை சாகுபடி செலவு செய்யப்பட்டுள்ளது. இப்போது கொரடாச்சேரி, குடவாசல், வடபாதிமங்கலம், கோட்டூர், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி செடிகள் தண்ணீரில் தேங்கி உள்ளன. இது பருத்தி சாகுபடிகள் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே உடனடியாக தண்ணீரை வடிவமைப்பதற்கான உதவிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மகசூல் இழப்பு ஏற்படும் பருத்திப் பயிர்களுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News