கோவில் திருவிழாவில் 3 பேரை கொல்ல முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை -தேனி கோர்ட்டு தீர்ப்பு
- கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட புதூரை சேர்ந்தவர் அறிவழகன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துச் சென்ற பெண்களை மது போதையில் கேலி செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்களான கண்ணன், ராமன் ஆகிய 3 பேரும் ரகளையில் ஈடுபட்ட அறிவழகனை தடுத்து நிறுத்தி தட்டி கேட்டுள்ளனர். இதனால் அறிவழகனுக்கும் சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் சிவா மற்றும் அவரது நண்பர்களான கண்ணன் மற்றும் ராமன் ஆகிய 3 ேபரையும் அறிவழகன் கத்தியால் குத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த 3 பேரும் போடி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நிறைவுற்று அறிவழகன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு 3 பேரையும் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அறிவழகன் மதுரை மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார்.