பண்ருட்டியில்சூதாட்டத்தில் ஈடுபட்ட12 பேர் கைது
கடலூர்:
பண்ருட்டி பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, புதுச்சேரியி்ல் இருந்து கடத்தி வரும் மது விற்பனை, கஞ்சா விற்பனை, சூதாட்டம் போன்றவைகளில் ஈடுபடும் நபர்களால் பண்ருட்டி பகுதியின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி பண்ருட்டி பகுதிகளில் மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பண்ருட்டி நகரில் தங்கும் விடுதிகளில் சூதாட்டம் நடப்பதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், புஷ்பராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் பண்ருட்டி நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் ஆய்வு செய்தனர். இதில் அங்கு ரூம்களை வாடகைக்கு எடுத்து பணத்தை வைத்து சீட்டு கட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.