உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் அரசு அலுவலகத்தில் ரூ.19 லட்சம் மோசடி - கணக்காளருக்கு வலைவீச்சு

Published On 2023-04-21 08:43 GMT   |   Update On 2023-04-21 08:43 GMT
  • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கணக்காளராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
  • நோட்டீஸ் அனுப்பியது முதல் மகேஸ்வரி பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக மேலாளராக ராதா (வயது 47) என்பவர் பணியாற்றி வருகின்றார்.

அலுவலக கணக்காளராக ராமலிங்கபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு சங்கரன் கோவிலில் உள்ள ஒரு வங்கியில் 2 நிரந்தர வைப்புத்தொகை கணக்கும், தமிழ்நாடு கிராம வங்கியில் நிர்வாக செலவுகளுக்காக பணம் எடுக்கும் வகையில் ஒரு வங்கி கணக்கும் இருந்துள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உள்ள கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில் தமிழ்நாடு கிராம வங்கியில் கணக்கில் இருந்து ரூ. 18 லட்சத்து 70 ஆயிரம் கணக்கில் வராதது தெரியவந்தது. மேலும் அனைத்து நிரந்தர வைப்பு நிதிக்கான ஆதாரங்களையும் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் அளிக்க கணக்காளர் மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸ் அனுப்பியது முதல் அவர் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அலுவலக மேலாளர் ராதா, சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அலுவலக கணக்காளரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News