ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது - சந்தையில் விற்க சென்ற போது சிக்கினர்
- வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த சாந்தகுமார் என்பவர் ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை.
- அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாந்தகுமார் (வயது42). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை சாந்தகுமார் வழக்கம் போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்டுள்ளார்.
ஆடு திருட்டு
வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த அவரது ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை. அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட சாந்தகுமார் ஆறுமுகநேரி சந்தைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு தனது ஆட்டை இரு நபர்கள் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய வேறு ஒருவரிடம் பேசி கொண்டிருப்பதை கண்டார்.
2 பேர் கைது
உடனடியாக இதுபற்றி அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆடு திருடிய அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் காயல்பட்டினம் ரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக்ராஜா (33), முத்துசாமி (34) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆடு மீட்கப்பட்டது. ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.