உள்ளூர் செய்திகள்

ஏரியில் மீன்பிடித்ததாக கூறி 2 வாலிபர்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கும்பல்

Published On 2024-07-22 09:54 GMT   |   Update On 2024-07-22 09:54 GMT
  • 2 வாலிபர்களுக்கும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சியில் உள்ளது மூங்கில் ஏரி. இந்த ஏரியில் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் உள்ளது. இதில் மீன்கள் அதிக அளவில் உள்ளன. இந்த ஏரியில் பச்சனம்பட்டி ஊராட்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் இரவு நேரங்களில் வலை விரித்து மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இவர்கள் இருவரையும் வேல கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சிலர் வீட்டுக்கு சென்று அவர்களை பிடித்து வந்து வேலகவுண்டனூர் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து இருசக்கர வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் கிளட்ச் வயர் மற்றும் கரும்பு ஆகியவற்றால் சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து இரவு முழுவதும் கட்டி வைத்து சிலர் மாறி மாறி தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் தெரிந்து உறவினர்கள் சென்று கேட்ட போது வாலிபர்கள் இருவரையும் விட மறுத்து மீண்டும் தாக்கியுள்ளனர். இது குறித்து வாலிபர்களின் உறவினர்கள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓமலூர் போலீசார் ஜெயக்குமார் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 2 வாலிபர்களுக்கும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்து ஓமலூர் அரசு மருத்துவ மனையில் வாலிபர்களின் உறவினர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறும்போது ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 வாலிபர்களை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்கியவர்கள் வேல கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சிலர் என தெரிய வருகிறது. ஏரியில் மீன்பிடித்து தவறு செய்திருந்தால் போலீசாரிடம் ஒப்படைக்கலாம் அல்லது உறவினர்களிடம் கூறலாம். அதற்காக கட்டி வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News