செய்திகள் (Tamil News)

திருவண்ணாமலை அருகே வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.-தி.மு.க. மோதல்: 5 பேர் படுகாயம்

Published On 2016-05-16 11:58 GMT   |   Update On 2016-05-16 11:58 GMT
திருவண்ணாமலை அருகே வாக்குச்சாவடிக்கு வெளியே தி.மு.க.- அ.தி.மு.க.வினர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு சேர்ப்பாபட்டு ஊராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடந்து கொண்டிருந்தது.

வாக்குச்சாவடிக்குள் சேர்ப்பாபட்டு ஊராட்சி தலைவரும், அ.தி.மு.க.வை சேர்ந்தவருமான மீன்விழி தர்மலிங்கம், அ.தி.மு.க. பூத் ஏஜெண்டாக அமர்ந்திருந்தார். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வாக்குச் சாவடிக்குள் தி.மு.க.– அ.தி.மு.க.வினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்தனர். அங்கும் அவர்களுக்கு இடையே தகராறு முற்றி கைகலப்பானது.

இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க.வினரை தி.மு.க.வினர் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அ,தி.மு.க. கிளை செயலாளர் பச்சைமுத்து, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சந்திரகுமார், ஏழுமலை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பச்சைமுத்துவுக்கு தலையிலும், சந்திரகுமாருக்கு கையிலும் உருட்டு கட்டையால் தாக்கிய காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடியில் நடந்த இந்த திடீர் மோதல் காரணமாக அங்கு பதட்டம் நிலவியது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

Similar News