செய்திகள் (Tamil News)

சுதந்திர தினத்தன்று ஆன்லைன் வர்த்தக ஒப்பந்த நகல் எரிப்பு: மயிலாடுதுறையில் வெள்ளையன் பேட்டி

Published On 2016-07-07 04:02 GMT   |   Update On 2016-07-07 04:02 GMT
சுதந்திர தினத்தன்று ஆன்லைன் வர்த்தக ஒப்பந்த நகல் எரிக்கப்படும் என்று மயிலாடுதுறையில் வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக வர்த்தகத்தை எதிர்த்து வருகிற 21-ந்தேதி தமிழகம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெறுகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்தும், அன்னிய முதலீட்டை எதிர்த்தும் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரதினத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும் அதன்பின்பு வணிகர்கள் கருப்பு உடை அணிந்து தமிழகம் முழுவதும் உலக ஆன்லைன் வர்த்தக ஒப்பந்த நகல் எரிக்கப்படும்.

பொதுவாக ஆன்லைன் வர்த்தகம் வாடிக்கையாளர் வீடு தேடி வருகிறது. உற்பத்தி விலையை விட குறைவாக இருக்கும். ஆனால் தரம் இருக்காது. இவ்வாறு செய்வதால் சில்லரை வணிகர்கள் அழிக்கப்படுவர். பின்னர் அன்னிய வர்த்தகம் மட்டுமே இந்தியா முழுவதும் ஆட்கொள்ளும். முந்தைய மத்திய அரசு, தற்போதைய மத்திய அரசும் வணிகர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

எனவே வெளிநாட்டு அன்னிய நிறுவனங்கள் காலூன்ற அனுமதிக்க மாட்டோம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் நாகை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஆர்.சி விஸ்வநாதன், பாண்டு, ஜெயக்குமார், மற்றும் வணிக பிரமுகர்கள் இருந்தனர்.

Similar News