செய்திகள் (Tamil News)

போலீஸ் எனக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

Published On 2016-08-22 12:33 GMT   |   Update On 2016-08-22 12:33 GMT
போலீஸ் எனக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொண்டலாம்பட்டி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர், பங்களா தெருவை சேர்ந்தவர் விஷ்வநாதன் (வயது69). இவரது மனைவி லட்சுமி(65). இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை 11.30 மணியளவில் திருச்சியில் இருந்து சேலம் வந்தனர்.

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருவரும் இறங்கி, பஸ் நிறுத்தம் அருகே ஸ்டேட் பாங்க் காலனியில் வசிக்கும் தனது மகனை பார்ப்ப தற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள ஒரு தேவாலயம் அருகே சென்ற போது டிப்-டாப் உடை அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்று கூறி, ஏன் கழுத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து வருகிறீர்கள்? யாராவது வழிப்பறி செய்து விடுவார்கள். எனவே நகைகளை கழற்றி பாதுகாப்பாக கொண்டு செல்லுங்கள் என்று கூறி கொண்டு இருக்கும் போது மற்றொரு நபர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது அந்த நபரிடம் உங்கள் கழுத்தில் இருக்கும் செயினை கழற்றி தாருங்கள். நாங்கள் அதனை பாதுகாப்பாக பேப்பரில் வைத்து உங்களிடம் திரும்ப தருகிறோம் என்று 2 மர்ம நபர்களும் கூறினர்.

உடனே அந்த நபரும் தான் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அவர்களும் அதனை பேப்பரில் வைத்து மடக்கி உடனே திரும்ப அந்த நபரிடம் கொடுத்தனர். பின்னர் அவர் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

இது மர்ம நபர்களின் நாடகம் என தெரியாத அந்த தம்பதி 2 மர்ம நபர்களும் நல்லவர்கள் என்று நம்பி விட்டனர். இதையடுத்து விஷ்வநாதன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரும் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை கழற்றி மர்ம நபர்களிடம் கொடுத்தனர். அவர்கள் பேப்பரில் அதனை வைத்து மடக்கி கொடுத்தனர். வீட்டின் அருகே சென்றதும் அந்த தம்பதி பேப்பரை பிரித்து பார்த்தனர். அந்த பேப்பரில் கற்கள் இருந்தது. இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

Similar News