செய்திகள் (Tamil News)

இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

Published On 2016-11-29 07:23 GMT   |   Update On 2016-11-29 07:23 GMT
மன்னார்குடி அருகே இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டையில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையம் உள்ளது.

இந்த நிலையத்திற்கு மன்னார்குடியை சுற்றி உள்ள களப்பால், கோட்டூர் ஆகிய பகுதிகளில் நிலத்துக்கடியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இதற்காக பூமிக்கடியில் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீண்டும் குழாய்களை பதிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.இப்பணி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறைவு பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்த பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கிய போது கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக கெயில் நிறுவனத்தில் ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்தின் பணியாளர்கள திருமக்கோட்டை வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், பணியாளர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த கெயில் நிறுவன அதிகாரி ரவிச்சந்திரன், திருமக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை விளை நிலங்களில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக கெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News