செய்திகள் (Tamil News)

கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றுவோம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Published On 2017-01-25 11:17 GMT   |   Update On 2017-01-25 11:17 GMT
குடியரசு தின விழாவில் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றுவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.
கோவை:

இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் மேலும் அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்தவும் உரிமை உள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கைது செய்து வருகிறார்கள். எனவே இலங்கை கடற்படையினரின் இந்த செயலை மத்திய- மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

நாளை (26-ந் தேதி) குடியரசு தினவிழாவையொட்டி கச்சத்தீவில் மத்திய- மாநில அரசுகள் தேசிய கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் கலெக்டர் அல்லது இந்திய கடலோர காவல் படையினர் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றவேண்டும்.

இல்லையென்றால் இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மண்டல இளை ஞரணி செயலாளர் அன்பு மாரி, மகளிரணி தலைவர் நிர்மலா மாதாஜி, நிர்வாகி மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News