செய்திகள் (Tamil News)

குடியாத்தம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

Published On 2017-02-08 11:25 GMT   |   Update On 2017-02-08 11:25 GMT
குடியாத்தம் அருகே கல்லப்பாடியில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே கல்லப்பாடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நேதாஜி, பால் வியாபாரி. கடந்த மாதம் வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்துடன் அதே கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து நேதாஜி பரதராமி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் மேற்பார்வையில் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, புஜ்ஜவாணி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடியாத்தத்தை அடுத்த பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரித்தபோது வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காடிஸ் என்ற காட்வின்மோசஸ் (வயது 26) என்பதும், ராணிப்பேட்டை, உதயேந்திரம், உமராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் போலீசாருக்கு தெரியாமல் இருக்க சைனகுண்டா பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடும்பத்தினருடன் தங்கி இருப்பதும், பகலில் மோட்டார் சைக்கிளில் கிராமப்புறங்களுக்கு சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதேபோல் கல்லப்பாடியில் நேதாஜி வீட்டில் இருந்து 19 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 18 பவுன் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காட்வின்மோசசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News