செய்திகள் (Tamil News)

ராணிப்பேட்டையில் பாலாற்றில் ரசாயன பொருட்கள் பைகளை கழுவிய 3 பேர் கைது

Published On 2017-02-10 10:21 GMT   |   Update On 2017-02-10 10:21 GMT
ராணிப்பேட்டையில் பாலாற்றில் கம்பெனிகளுக்கு ரசாயன பொருட்கள் கொண்டு வந்த பைகளை கழுவிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலாஜா:

ராணிப்பேட்டை பகுதியில் ஏராளமான கம்பெனிகள் உள்ளன. இந்த கம்பெனிகளுக்கு ரசாயன பொருட்கள் கொண்டு வரும் கோணிப்பைகளை பாலாற்றங்கரைக்கு கொண்டு வந்து கழுவுவதாகவும், இதன் காரணமாக தண்ணீர் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் இது பற்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பாலாற்றங்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை வாலாஜா தாசில்தார் பிரியா, பொதுப்பணித்துறை அதிகாரி விஜயன், கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி ஆகியோர் பாலாற்றங்கரையில் ரோந்து சென்றனர்.

அப்போது 3 பேர் பாலாற்றங்கரையில் ரசாயன பொருட்கள் கொண்டு வரப்பட்ட கோணிப்பைகளை கழுவிக் கொண்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் படியம் பாக்கத்தை சேர்ந்த தயாளன் (வயது 26), மதிவாணன் (26), புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த உமாபதி (42) என்பது தெரியவந்தது.அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News