செய்திகள் (Tamil News)

ஒரத்தநாட்டில் போலீஸ் ஜீப்பிலிருந்து கைதி தப்பி ஓட்டம்

Published On 2017-03-22 15:07 GMT   |   Update On 2017-03-22 15:07 GMT
ஒரத்தநாட்டில் போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் குடிகாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயலட்சுமி.

அதே ஊரை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவர் தனக்கு வறட்சி நிவாரணம் குறைவாக வந்துள்ளதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமியிடம் தகராறு செய்து மிரட்டி உள்ளார்.

இது குறித்து ஜெயலட்சுமி பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தார்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்றனர். பட்டுக்கோட்டை - ஒரத்தநாடு சாலையில் ஜீப்பை நிறுத்தி பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது கைதி சீனிவாசன் போலீஸ் ஜீப்பில் இருந்து குதித்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News